Monday 23 November 2015

மகான் ஸ்ரீ ராம தேவ சித்தரின் அற்புத சரித்திரம்



ராமதேவர்


மெக்கா நகர மக்களே! 

நான் ஒரு சித்தன். உங்கள் அரபு நாட்டில் காயகல்ப மூலிகைகள் இருப்பதை அறிந்து, அவற்றைப் பற்றி ஆய்வு செய்து, மருந்துகள் தயாரித்து மனித குலத்தின் நோய் தீர்க்கவே இங்கு வந்தேன். என்னைத் தவறாகக் கருதாதீர்கள். எனக்கு மத வேறுபாடெல்லாம் கிடையாது. நான் எல்லா மதங்களையும் நேசிப்பவன், என்றார் ராமதேவர். 




யார் இந்த ராமதேவர்




ராமதேவர் நாகப்பட்டினத்தில் மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தவர். இளம் வயதிலேயே அஷ்டமாசித்திகள் கைவர பெற்றவர். சில சித்தர்கள் தங்கள் உடலை கிடத்திவிட்டு, ஆன்மாவை பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். ஆங்காங்கு கிடைக்கும் உடல்களில் புகுந்து கொண்டு சேவை செய்வார்கள்.

ராமதேவர் மிகவும் வித்தியாசமானவர். முயற்சி... முயற்சி... முயற்சி... இதுவே அவரது தாரக மந்திரம். இந்த மந்திரத்திற்கு மாபெரும் பலன் கிடைத்தது. ராமதேவர் தன் உடலுடனேயே பிற தேசங்களை விரைவில் அடையும் சித்தியை பெற்றார். ஒருமுறை இவர் கங்கைக்கு நீராடச் சென்ற போது, சட்டைநாதரின் விக்ரகம் அவருக்கு கிடைத்தது. அதை நாகப்பட்டினம் கொண்டு வந்து ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்தார்.

சித்தர்களின் ஆசி


சில சித்தர்களின் தரிசனமும் இமயமலைக் காடுகளில் அவருக்கு கிடைத்தது.அவர்கள் ராமதேவரிடம், சித்தனே! நீ மெக்கா செல். அங்கே ஏராளமான காயகல்ப மூலிகைகள் இருக்கின்றன. அவற்றை ஆய்வு செய்து, மருந்து தயாரித்து மக்களின் பிணி தீர்க்கும் உன்னதமான பணியைச் செய், என்று வற்புறுத்தினர்.

ராமதேவரின் மெக்கா பயணம்

அவர்களது கட்டளையை ஏற்ற ராமதேவர் தன் சித்தியால் மெக்கா சென்றடைந்தார். புதியவர் ஒருவர் தங்கள் நாட்டுக்கு வந்ததும், அரபு நாட்டு மக்கள் அவரை ஏற்க மறுத்தனர். அரபு நாட்டவரைத் தவிர மற்றவர்கள் அங்கு தங்க அனுமதி கிடைக்காது என்று கூறி அவரை திரும்பி விடும்படி எச்சரித்தனர். நான் எல்லா மதங்களையும் நேசிப்பவன், என்று அவர் அவர்களிடம் சொல்லவே, மிக நல்லது, அப்படியானால், நீங்கள் எங்கள் மதத்தில் இணைந்து விட வேண்டியது தானே! குர்ஆனையும் நீங்கள் ஓத வேண்டும். அவ்வாறு செய்தால், நீங்கள் இங்கிருக்க அனுமதி தருகிறோம், என்று மக்கள் கூறினர்.

யாக்கோப்பு ஆகிய ராமதேவர்

அவ்வளவுதானே! அதை நான் செய்கிறேன், என்றார் ராமதேவர். அவருக்கு யாக்கோபு என்று பெயரிட்டு தங்கள் மதத்தில் சேர்த்துக் கொண்டனர் அரபு மக்கள். ராமதேவ சித்தர் இப்போது யாக்கோபு சித்தர் ஆகிவிட்டார். அரபுநாட்டில் கிடைத்த பலவகை மூலிகைகளை ஆய்வு செய்து அவற்றின் குணம், குணப்படுத்தும் நோய்கள் ஆகியவை குறித்து எழுத ஆரம்பித்தார். சிறிது காலத்திலேயே அரபு மொழியையும் கற்று, அந்நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் வைத்திய சிந்தாமணி என்னும் நூலை அரபு மொழியில் எழுதினார். அரபு மக்கள் அவரை போற்றத் துவங்கினர். அவரிடம் பலர் மருத்துவ முறைகளையும் கற்றுக் கொண்டனர்.




போகரின் ஆணை 

இந்நிலையில், போகர் சித்தர் அவர் முன்பு தோன்றினார். ராமதேவா! நீ வைத்திய முறைகளை முழுமையாக அறிந்து கொண்டு விட்டாய். இனி நீ நாடு திரும்பு. சதுரகிரி மலைக்குச் சென்று இந்த மூலிகைகளை ஆய்வு செய்தது குறித்து எழுது. மேலும், இம்மூலிகைகளை ஆய்வு செய், என்றார்.


சதுரகிரி விஜயம்





அதன்படி ராமதேவர் சதுரகிரி மலை வந்து சேர்ந்தார். தனது சீடர்களிடம், போகரின் அறிவுரைப்படி நான் பத்தாண்டுகள் ஒரு சமாதிக்குள் இருந்து பாலைவன மூலிகைகள் குறித்து ஆய்வு செய்யப் போகிறேன். நான் வரும் வரை நீங்கள் சமாதி வாசலில் காத்திருங்கள், என்றார்.பத்தாண்டு காலம் சமாதிக்குள் இருக்கும் ஒருவர் எப்படி திரும்புவார்? இது சாத்தியமல்ல என்று நினைத்த சீடர்கள், அவர் சமாதிக்குள் சென்றதும் அங்கிருந்து சென்று விட்டனர். ஒரே ஒரு சீடர் மட்டும் தனது குரு நிச்சயம் திரும்புவார் என நம்பி சமாதி வாசலில் காத்திருந்தார். 

சமாதிக்குள் சென்ற சித்தர், மூலிகைகளை ஆய்வு செய்தார். சமாதிக்குள் இருந்தே யாரும் அறியாத வண்ணம் பல்வேறு இடங்களுக்குச் சென்றார். ஒருமுறை சமாதிக்குள் இருந்த காலங்கிநாத சித்தரைத் தரிசித்தார். அவர் தன்னுடைய அனுபவங்களையெல்லாம் ராமதேவருக்கு போதித்தார். ஆக, ராமதேவ சித்தர் மிகப்பெரிய ஞானியாகத் திகழ்ந்தார்.


 
சமாதியில் இருந்து மீண்ட அற்புதர்

எதையும் செய்யும் ஆற்றலைப் பெற்ற பிறகு, அவர் சொன்னபடியே சமாதிக்குள் இருந்து பத்தாண்டுகள் கழித்து வெளிப்பட்டார். தன்னுடைய சீடர்களே தன்னை நம்பாமல் சென்றது பற்றி அவர் சிறிதும் வருந்தவில்லை. 

ஒரே ஒரு சீடன் விசுவாசத்துடன் தங்கியிருந்தது பற்றி சந்தோஷம் கொண்ட அவர், சீடனே! மற்றவர்கள் என்னைத் தூற்றி விட்டு சென்றது பற்றி நான் கவலைப்படவில்லை. 

ஏனெனில், நான் எத்தனை ஆண்டுகாலம் இந்த சமாதிக்குள் தங்கி மூலிகை ஆய்வு செய்தாலும், நோய்கள் தற்காலிகமாக குணப் படுத்தப்பட்டாலும், பல நூறு ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்தாலும், ஒருநாள் மரணம் சம்பவிக்கத்தான் செய்யும். 

இந்தக் கருத்தின்படி பார்த்தால், நமது குரு தேவையில்லாமல் சமாதிக்குள் அமர்ந்து, மூலிகை ஆய்வு செய்கிறார் என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கும். அது நியாயமான சிந்தனை தானே! இருப்பினும், வாழும் காலத்தில் மனிதன் சுகமாக வாழவே இந்த ஆய்வை மேற்கொள்கிறேன். நான் மேலும் முப்பதாண்டுகள் சமாதியில் இருக்கப்போகிறேன். மூலிகை ஆய்வைத் தொடர்வேன், எனச் சொல்லிவிட்டு சமாதிக்குள் சென்று விட்டார்.அந்த சீடனும் அங்கேயே காத்திருந்தான். 


அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர்

முப்பதாண்டுகள் கழித்து வெளிப்பட்ட சித்தர், பொறுமைக்கார சீடனுக்கு தான் கற்றவற்றையெல்லாம் போதித்தார். அந்த சீடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவனது பொறுமைக்கு மிகுந்த பரிசு கிடைத்தது. 

                   இதனிடையே ராமதேவர் சமாதிக்குள் சென்ற பிறகு, அவரை நம்பாமல் சென்ற சீடர்களின் பார்வை பறிபோய் விட்டது. அவர்களும் சித்தரை வணங்கி மன்னிப்பு கேட்டு பார்வை பெற்றனர். அவர்களிடம், நான் இப்போது நிரந்தர சமாதிக்குச் செல்கிறேன். அழகர் மலையில் (மதுரை அருகிலுள்ளது) சமாதியாகி மக்களுக்கு அருள் செய்வேன், என சொல்லிவிட்டு சென்றார். அங்கேயே சமாதியானார்.

பதினெண் சித்தர் வரலாறு , அழகர் மலை
 

காலம்: ராமதேவர் முனிவர் மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 6 நாள் ஆகும்.

ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திரத்தன்று அருள் சித்தர் ஸ்ரீ ராம தேவ ஆன்ம பீடம் குழுவினரால் கைலாச நாதராய் அருள்பாலிக்கும் ஸ்ரீ ராமதேவ சித்தருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ ராமதேவ சித்தருக்கு மாசி மாதம் பூரம் நட்சத்திரம் அன்று குருபூஜை விழாவானது அருள் சித்தர் ஸ்ரீ ராம தேவ ஆன்ம பீடம் குழுவினரால் அபிஷேகம், ஆராதனை , அன்னதானம் என்று சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

தொடரும் .............


நன்றி . டெம்பிள்தினமலர்.காம்


No comments:

Post a Comment